உலக நாடுகளுக்கு அமெரிக்கா, இந்தியா அழைப்பு
புதுடெல்லி: பயங்கரவாத செயல்பாடுகளை வேரறுக்க உலக நாடுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தி உள்ளன.
பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிரான இந்திய, அமெரிக்க கூட்டு நடவடிக்கை குழுவின் 19ஆவது சந்திப்புக்குப் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் அனைத்துலக அளவில் நடமாடுவது குறித்து இரு நாடுகளும் விவாதித்த நிலையில், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதிகள் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல் கய்தா, ஐஎஸ்ஐஎஸ், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொஹம்மட் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் அத்தகைய அமைப்புகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் இரு நாடுகளும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான மேற்குறிப்பிடப்பட்ட சந்திப்பும் பேச்சுவார்த்தையும் டெல்லியில் கடந்த 12, 13ஆம் தேதிகளில் நடைபெற்றது.
"எல்லை கடந்த பயங்கரவாதம், அனைத்துலக தீவிரவாதம் ஆகியவற்றை இரு நாடுகளும் வன்மையாகக் கண்டிக்கின்றன. 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல், பதான்கோட் தாக்குதல் ஆகியவற்றுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இரு நாடுகளும் வலியுறுத்துகின்றன," என்று பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அறிவுறுத்தும் வகையில் வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் ஊடுருவ முயன்ற சீனத் துருப்புகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் சீனப் படை ஓட்டம்பிடித்தது என்றும் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
"நமது நாட்டுக்குச் சொந்தமான பகுதிகளைக் காப்பதற்கு நமது படைகள் உறுதி பூண்டுள்ளன என்பதை நாடாளுமன்ற அவையில் உறுதிபடக் குறிப்பிட விரும்புகிறேன்.
"எல்லையில் ஏதேனும் அத்துமீறல் முயற்சிகள் நடந்தால், நமது படையினர் அதை முறியடிப்பார்கள். இந்த துணிச்சலான முயற்சியில் இந்தியப் படை வீரர்களை ஆதரிப்பதில் நமது ஒட்டுமொத்த அவையும் ஒன்றிணைந்து நிற்கும் என நான் நம்புகிறேன்," என்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார் அமைச்சர் ராஜ்நாத்சிங்.
இதற்கிடையே, இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிலைமை சீராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார். இரு தரப்புக்கும் இடையே ராணுவ, தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. அதனால்தான் எல்லையில் மோதல்கள் நிகழ்வதாக அக்கட்சியின் மக்களவை துணைத்தலைவர் கவுரவ் கோகாய் தெரிவித்துள்ளார்.
"உங்கள் பலவீனத்தை சீனா அறிந்துகொள்ள விட்டுவிட்டீர்கள். அதனால்தான் உங்கள் ராஜதந்திரத்தில் தோல்வி ஏற்பட்டது," என்று கவுரவ் கோகாய் கூறி உள்ளார்.