99 வயதில் சபரிமலைக்கு வந்த மூதாட்டி
திருவனந்தபுரம்: தமது 99ஆவது வயதிலும் சபரிமலைக்கு வந்த மூதாட்டியைக் கண்டு பக்தர்கள் வியப் படைந்தனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த தேவு என்ற அந்த மூதாட்டி 26ஆவது ஆண்டாக இம்முறையும் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தார். இதை அறிந்து வியந்துபோன பக்தர்கள் அவருடன் 'செல்ஃபி' எடுத்துக்கொண்டனர்.
கலவர வழக்கில் பெண் எம்எல்ஏவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை
ராஞ்சி: கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கார்க் தொகுதியில் இயங்கி வந்த தனியார் தொழிற்சாலையில் அப்போது போராட்டம் வெடித்தது. அது பின்னர் கலவரமாக மாறியது. அப்போது நிகழ்ந்த மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பெண் எம்எல்ஏ மம்தா தேவி உள்பட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மம்தா தேவி உள்பட 13 பேருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார்.
குஜராத்: உளவு பார்த்த இளையர் கைது
அகமதாபாத்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த தீபக் கிஷோர் என்ற இளையர் கைதாகி உள்ளார். 33 வயதான அவர் ஆடை விற்பனையகத்தின் உரிமையாளர் ஆவார்். இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து பல்வேறு முக்கிய தகவல்களைப் பெற்று பாகிஸ்தான் உளவு அமைப்புக்குத் தெரிவித்தார் என்று தீபக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி பேரணியில் பாஜக எம்பி
மும்பை: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டனப் பேரணியில் பாஜக எம்பி பங்கேற்றது அக்கட்சியின் மாநிலத் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. புனே நகரில் நடை பெற்ற பேரணியில் மகாவிகாஸ் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். அதில் பாஜகவைச் சேர்ந்த உதயன்ராஜே போஸ்லே பங்கேற்று பேசினார். அக்கட்சி யின் மாநிலத் தலைமை, உதயன்ராஜே மீது மாநில ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

