கோல்கத்தா: மேகாலயாவையும் வடகிழக்கு மாநிலங்களையும் மத்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலம் அதன் மண்ணின் மைந்தர்களால் ஆளப்படுவதை திரிணாமுல் காங்கிரஸ் உறுதி செய்யும் என்றும் இதன் பொருட்டு மேகாலயா மக்களுக்கு உதவ விரும்புவதாகவும் அவர் கூறினார்.
"நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம். இந்த மாநிலம் வளம் பெறும் என நாங்கள் உறுதி அளிக்கிறோம். மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்," என்று மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
மேகாலய மக்கள் சிரமப்பட்டது போதும் என்றும் அம்மாநில அரசு அவர்களைப் புறக்கணித்தாலும் அம்மக்களுக்கு அதிகாரம் வழங்குவதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மையில், அசாம், மேகாலய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதலின்போது சிலர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கிய முதல்வர் மம்தா, துக்க வேளையில் மக்களுடன் இணைந்திருப்பது தமது கடமை என்றார்.
அண்மைக் காலமாக வடகிழக்கு மாநில அரசியல் களத்திலும் முதல்வர் மம்தா ஈடுபாடு காட்டி வருகிறார். இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அவரது வியூகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

