திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் ஆளுநருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கானுக்கும் அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர், பேராசிரியர்களை நியமிக்கும் நடைமுறையில் ஆளுநர் குறுக்கிடுவதாக மாநில அரசு குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், இத்தகைய நியமனங்களில் தகுதியற்றவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாக ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், கடந்த மாதம் இடதுசாரி கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.
கேரளாவில் உள்ள 11 பல்கலைக்கழகங்களில் தகுதியற்ற துணை வேந்தர்கள் இருப்பதாக கூறிய ஆளுநர் மாளிகை, அனைவரையும் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கான வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் ஆளும் அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
புதிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என ஆரிஃப் முகம்மது கான் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

