மும்பை: ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், மும்பையில் நடைபெற்ற அதன் செயற்குழுக் கூட்டத்துக்காக அங்குள்ள சாலையோர குடிசைப் பகுதிகள் அனைத்தும் பதாகைகள், துணியைக் கொண்டு மறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடிசைகளில் வசிப்போருக்கு மாற்று இடம் தராமல், அவற்றை மறைப்பது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி20 அமைப்பின் செயற்குழுக் கூட்டம் கடந்த இரு தினங்களாக மும்பையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
செயற்குழுக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி பாந்த்ரா குர்லா பகுதியில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் சாண்டாகுருஸ் பகுதியில் உள்ள நட்சத்திர தங்கு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வந்து சேரும் முன்பே, மும்பையில் உள்ள முக்கிய சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டது.
மேலும், சாலையோர குடிசைகள், சாக்கடைகளை வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பார்வையில் இருந்து மறைப்பதற்காக வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டன. சில இடங்களில் பிரமாண்ட துணிகளைக் கொண்டு குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டன.
சில நாள்களுக்கு முன்பே சாலையோர கடைகள் அகற்றப்பட்டது, குடிசைப் பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்பு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அகமதாபாத் நகருக்கு வருகை மேற்கொண்டபோதும், இதே போல் அங்குள்ள குடிசைப் பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டன.

