புதுடெல்லி: பள்ளி மாணவி மீது அமிலம் வீசிப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக மூன்று பேர் கைதாகி உள்ளனர்.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், மேற்கு டெல்லியில் 17 வயது பள்ளி மாணவி மீது அமிலம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்மாணவி நேற்று முன்தினம் காலை சுமார் 7.30 மணியளவில் தனது தங்கையுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென அம்மாணவியின் அருகே வந்துள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர், தன் கையில் வைத்திருந்த அமிலத்தை மாணவியின் முகத்தை நோக்கி வீசினார். அமிலம் பட்டதை அடுத்து அம்மாணவி தன் முகத்தை மூடிக்கொண்டு வேதனையில் அலறித் துடிக்க, தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டனர்.
பதறிப்போன மாணவியின் தங்கை அருகிலுள்ள தன் வீட்டுக்குச் சென்று தந்தையிடம் விவரம் தெரிவிக்க, அவர் பதறியடித்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அதற்குள் ஆம்புலன்ஸ் வாகனமும் வந்து சேர, மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அமில வீச்சு காரணமாக மாணவியின் இரு கண்களும் பாதிக்கப்பட்டுள்ளன. முகத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் துணியால் முகத்தை மூடியிருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. எனினும், தன்னைத் தாக்கியவர்கள் யாராக இருக்கக்கூடும் என மாணவி குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் காவல்துறை மூன்று பேரை கைது செய்துள்ளது.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

