புதுடெல்லி: பண மோசடி புகார்கள் குவிந்ததை அடுத்து 'எம்பிஎப்' என்ற கைப்பேசி செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அந்நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.51 கோடி நிதியை மத்திய அமலாக்கத்துறை முடக்கி வைப்பதாக அறிவித்தது.
நாடு முழுவதும் கைப்பேசி செயலி மூலம் நடைபெறும் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், 'எம்பிஎப்' என்ற கைப்பேசி செயலியைப் பயன்படுத்திய பலர் பணத்தை இழந்து தவிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மேகாலயா மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிலரைக் கைது செய்தனர்.
இந்தச் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் எனப் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த விளம்பரத்தால் கவரப்பட்ட ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் திடீரென அந்தச் செயலி இயங்காமல் போனது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதை உருவாக்கி, பண வசூலில் ஈடுபட்ட நிறுவனமும் திடீரென மூடப்பட்டது. அந்நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் மாயமாகினர். வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்த பல கோடி ரூபாய் பணம் என்னவானது என்று தெரியாத நிலையில், காவல்துறை தீவிர விசாரணை ஏற்கொண்டது.
அதன் பலனாக, 'எம்பிஎப்' செயலியுடன் தொடர்புடையவர்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.51 கோடியே 11 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
நொய்டா, புனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

