புதுடெல்லி: கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தேசிய புலனாய்வு முகமை 497 பயங்கரவாத வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பதிவான வழக்குகளில் அண்மையில் கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் அடங்கும் என எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தேசிய புலனாய்வு முகமை அனைத்து வழக்குகளிலும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிவுற்ற 67 பயங்கரவாத வழக்குகளில், 65 குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரு வழக்குகளில் மட்டும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்," என்று அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை மேற்கொள்ளும் விசாரணைகள் ஒருதலைப் பட்சமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில், அந்த அமைப்பு விசாரித்து வரும் வழக்குகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இதையடுத்து, உள்துறை அமைச்சு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.இதன் மூலம் புலனாய்வு முகமை பாரபட்சமின்றிச் செயல்படுவது தெரிய வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

