செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e8ef0c78-cf2f-48c0-a09c-0db294a99369
-

ஓசாமாவுக்குப் புகலிடம்: பாகிஸ்தான் குறித்து இந்தியா மறைமுக விமர்சனம்

புதுடெல்லி: பயங்கரவாதி ஒசாமா பின் லேடனுக்கு புகலிடமாக இருந்த பாகிஸ்தானுக்கு ஐநா அவையில் காஷ்மீர் விவகாரம், ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருமித்த கொள்கையை ஏற்படுத்துவதில் உலக நாடுகள் தாமதிக்கக் கூடாது என்றார். "காலநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு என பல விஷயங்களில் சிறந்த தீர்வை எட்ட நாங்கள் முயற்சிக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்த அவை கண்டிக்க வேண்டும். ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்த நாடு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு, ஐநா அவையில் பேசுவதற்கு தகுதியற்றது," என்றார் ஜெய்சங்கர்.

வரதட்சணை கொடுமைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 35,493 பேர் பலி

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் 35,493 இறப்புகள் பதிவாகி உள்ளன. இத்தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த 2017-2021 ஆண்டுகளுக்கிடையே நாட்டில் நாள்தோறும் சுமார் 20 வரதட்சணை தொடர்பான மரணங்கள் பதிவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதிகபட்சமாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாள்தோறும் ஆறு பேர் வரதட்சணை கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்றும் அம்மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகி உள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 39 பேர் பலி; பலருக்கு கண்பார்வை பாதிப்பு

பாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 39 பேர் பலியாகிவிட்டனர். அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. அங்குள்ள சரன் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி உள்ளனர். இதை கிராம மக்கள் பலர் வாங்கி குடித்தனர். அவர்களில் பலருக்கும் உடனடியாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிலருக்கு கண்பார்வை பறிபோனது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை வரை 39 பேர் பலியாகிவிட்டதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

6 மாதங்களில் 68 முறை 'வந்தே பாரத்' ரயில்கள் மீது கால்நடைகள் மோதல்

மும்பை: 'வந்தே பாரத்' ரயில்கள் மீது கால்நடைகள் மோதுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 68 முறை இவ்வாறு ரயில் மீது கால்நடைகள் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஆறு வழித்தடங்களில் 'வந்தே பாரத்' விரைவு ரயில் இயக்கப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக நவீன ரயில்களின் முன்பகுதி எளிதில் சேதமடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் மீது மோதும்போது ரயிலின் முன்பகுதி பெரும் சேதத்தைச் சந்திப்பதால் ரயில் சேவை பாதிக்கப்படுகிறது.

பாஜக நலத்திட்ட உதவி வழங்கும் கூட்டத்தில் நெரிசல்: மூவர் பலி

கோல்கத்தா: காவல்துறையின் அனுமதி இன்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று பேர் பலியாகிவிட்டனர். மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலவசப் போர்வைகள் வழங்கப்படும் என்பதைக் கேள்விப்பட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். ஒரு கட்டத்தில் பாஜகவினரால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. இந்நிலையில், கடும் நெரிசல் ஏற்பட்டதில் மூன்று பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த கூட்டத்தை நடத்த பாஜக நிர்வாகிகள் காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று மாநில அரசு குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.