செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
edd5ed72-2938-47ef-a206-1eb1c4ce2185
-

திராங்கானு, கிளந்தானில் வெள்ளம்

கோத்தா பாரு: தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள கிளந்தான், திராங்கானு மாநிலங்களில் வெள்ளம் மோசமடைந்துள்ளது.

அதே வேளையில், எட்டு மாநிலங்களில் நாளை வரை மழை தொடர்ந்து பெய்யும் என்று மலேசிய வானிலைத் துறை எச்சரித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியது.

கிளந்தானில் நான்கு மாவட்டங்களில் உள்ள 12 பாதைகள் நேற்று பிற்பகல் அளவில் மூடப்பட்டிருந்தன.

திரங்கானுவில் ஆறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக பேரிடர் குழுவின் துணைத் தலைவர் ஹனாஃபியா மாட் கூறினார். இம்மாதத் தொடக்கத்தில் உண்டான வெள்ளத்தைவிட இந்த முறை வெள்ளம் மோசமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் கிழக்குக் கரை விரைவுச்சாலை இரண்டில் (எல்பிடி 2) நேற்று காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் விரைவுச்சாலையில் விபத்துகள் ஏதும் நிகழவில்லை.

ஐரோப்பாவின் கரிமச் சந்தையை

மாற்றியமைப்பது பற்றி உடன்பாடு

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிமச் சந்தையை மாற்றியமைப்பது பற்றி அமைப்பின் அதிகாரிகள் உடன்பாட்டை எட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையான ஸெக் குடியரசும் ஐரோப்பிய மன்றமும் நேற்று அதைத் தெரிவித்தன.

உலக வெப்பமயத்தையும் பருவநிலை மாற்றத்தையும் தடுக்கும் கொள்கைகளுக்கான முக்கிய கருவியாக கரிமச் சந்தையை ஐரோப்பிய ஒன்றியம் பயன்படுத்தி வருகிறது.

வரும் 2030க்குள் கரிம வெளியேற்றத்தை 55 விழுக்காடு குறைக்கும் இலக்கை ஒன்றியம் எட்ட அந்த உடன்பாடு உதவும். அதன்படி ஐரோப்பாவில் செயல்படும் 10,000 மின் ஆலைகளும் தொழிற்சாலைகளும் கரிமத்தை வெளியேற்றும்போது கரிமச் சான்றிதழ்களை வாங்க வேண்டியிருக்கும். மேலும், சில துறைகளில் கரிம வெளியேற்றத்தை 62 விழுக்காடு குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணங்கியுள்ளன.

விலைமதிப்பில்லா நகைகள் கண்டுபிடிப்பு

ஃபிராங்க்ஃபர்ட்: கடந்த 2019ஆம் ஆண்டு ஜெர்மானிய அரும்பொருளகத்திலிருந்து திருடப்பட்ட நகைகளில் கணிசமானவற்றைக் கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மானியக் காவல்துறை கூறியுள்ளது. தலைநகர் பெர்லினில் வெள்ளிக்கிழமை பின்னிரவில் 31 நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

சென்ற 2019 நவம்பரில் டிரெஸ்டென் நகரில் உள்ள அரச மாளிகையில் உள்ள கிரீன் வால்ட் அரும்பொருளகம் களவாடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, 113.8 மில்லியன் யூரோ (S$164 மி.) மதிப்பிலான நகைகள் களவு போயின. அவற்றில் 4,300க்கும் அதிகமான வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. நவீன வரலாற்றின் மிகப் பெரிய திருட்டு என்று கூறப்பட்ட அச்சம்பவத்தின் தொடர்பில், ஆறு பேரின் வழக்குவிசாரணை நடைபெற்று வருகிறது.