ேசால்: கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கரையோரம் அருகேயுள்ள கடற்பகுதியில் வடகொரியா இரண்டு ஏவுகணைகளைப் பாய்ச்சி சோதித்துள்ளது. தென்கொரியாவும் ஜப்பானும் இதை நேற்று தெரிவித்தன.
அந்த இரண்டு இடைத்தொலைவு ஏவுகணைகளும் 500 கிலோமீட்டர் பாய்ந்ததாக தென்கொரியா தெரிவித்தது.
அவை ஜப்பானின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்கு வெளியே விழுந்ததாகவும் ஏவு கணைகளால் சேதம் ஏதும் இல்லை என்றும் ஜப்பானின் தற்காப்புத் துணை அமைச்சர் டொஷிரோ இனோ கூறினார்.
வடகொரிய நடவடிக்கையை அடுத்து ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைக் கூட்டி, பதற்றத்தை அதிகரிக்கும் அச்செயலுக்காக வடகொரியாவைக் கண்டித்ததாக தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
வடகொரியா ஏவுகணைகளைப் பாய்ச்சும் புதிய இயந்திரப் பொறியை சில நாள்களுக்கு முன்னர்தான் சோதித்தது. ஏவுகணைகளை வேகமாகப் பாய்ச்சும் திறன்பெற்ற அந்த இயந்திரப் பொறி பல்வேறு இடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லக்கூடியது.
வடகொரியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு 65க்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
நவம்பரில். அமெரிக்காவின் முக்கிய நிலப்பரப்பை எட்டக்கூடிய ஏவுகணையை அது சோதித்தது.

