பெய்ஜிங்: சீன நகரங்களில் கொவிட்-19 தொற்று அலை பரவி வரும் நிலையில் மக்கள் தங்களைத் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.
சீனாவில் மூன்று தொற்று அலைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் முதல் அலை தற்போது பரவி வருவதாகவும் நாட்டின் தலைமைத் தொற்று நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் வூ ஸுன்யோ நேற்று கூறினார்.
சீனப் புத்தாண்டுக்காக வழக்கம்போல ஜனவரியில் பெரும் திரளான மக்கள் நகரங்களை விட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பினால், தொற்று எண்ணிக்கை பல்கிப் பெருகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனா கடந்த 7ஆம் தேதி அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளை திடீரென்று அகற்றிய பின்னர், தொற்றினால் ஏற்பட்ட மரணம் எதையும் அறிவிக்கவில்லை.
ஆனால் சீன அரசாங்கம் உண்மையைச் சொல்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் இறுதிச் சடங்கு நிலையங்களும் தகனச் சாலைகளும் நிரம்பி வழிகின்றன.
பெய்ஜிங்கில் உணவு, பொருள் விநியோகச் சேவைகள் முடங்கியுள்ளன. சியான், செங்டு போன்ற நகரங்களில் ஆள் அரவம் இல்லாத சாலைகளை சமூக ஊடகப் பதிவுகள் காட்டின.
பல இடங்களில் விரைவுப் பரிசோதனைக் கருவிகளும் சளி, காய்ச்சல் மருந்துகளும் கிடைக்கவில்லை.
ஷங்காய் நகரில் இன்று முதல் பெரும்பாலான வகுப்புகள் இணையம் வழி நடத்தப்படவுள்ளன.

