மும்பை: இந்திய, சீன எல்லைப் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இனி இந்திய எல்லையை யாராலும் மாற்ற முடியாது என்றும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
எல்லைப் பகுதியில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வந்தாலும், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லைப் பகுதியில் 600க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் அத்துமீறியதாகவும் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்ட அவர்களை இந்திய வீரர்கள் துரத்தியடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
எல்லைப் பதற்றம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஏற்கெனவே இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சீனா, தற்போது இந்தியா மீது போர் தொடுக்க தயாராகி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், மத்திய அரசு உறங்கிக் கொண்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல் அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார் என்றும் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும்் தெரிவித்தார்.
"இந்திய எல்லையை யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது. குறிப்பாக, சீனாவால் எல்லைக் கோட்டை மாற்ற முடியாது. சீனாவின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்," என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
மேலும், மக்களவையில் நேற்று முன்தினம் பேசும்போது, அருணாச்சலப் பிரதேச எல்லை விவகாரத்தில் மத்திய அரசை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை தடுக்கவில்லை என்றாலும் இந்திய வீரர்கள் அடிவாங்குகிறார்கள் என்பது போன்ற கருத்துகள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

