பெங்களூரு: கர்நாடகாவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் சிபிஐ நேற்று முன்தினம் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
ஒரு கல்லூரியிலும் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அக்கல்லூரி, பள்ளிக்குச் சொந்தமான இடங்கள், கல்விக் கட்டணம் தொடர்பான ஆவணங்களை அவர்கள் பார்வையிட்டனர். மேலும், நிர்வாகப் பிரிவில் உள்ள மற்ற பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, சுமார் ரூ.8.5 கோடி மதிப்புள்ள ரொக்கப் பணம், ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிவக்குமார் மீது மத்திய அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
அதன் பின்னர் இதே விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து, தன் பங்குக்கு விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சிபிஐ தரப்பில் மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. கர்நாடகாவில் மிக விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை மனதிற்கொண்டு டி.கே.சிவக்குமாருக்கு நெருக்கடி தருவதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

