செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
220f9f85-d52b-4cbf-864b-6e0dee187799
-

கூகல்: பெண்கள் நிர்வகிக்கும் துளிர் நிறுவனங்களில் ரூ.600 கோடி முதலீடு

புதுடெல்லி: இந்தியாவில் பெண்களால் நிர்வகிக்கப்படும் துளிர் நிறுவனங்களில் கூகல் நிறுவனம் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர் தமது டுவிட்டரில் பதிவில், "மின்னிலக்க இந்தியா என்ற பார்வை, நாடு முழுவதும் நாம் காணும் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவியது," எனக் குறிப்பிட்டுள்ளார்.

கைக்குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த மகாராஷ்டிர பெண் எம்எல்ஏ

மும்பை: பிறந்து இரண்டரை மாதங்களே ஆன தமது குழந்தையுடன் மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்றார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ சரோஜ் அஹிர். அவருக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதிதான் குழந்தை பிறந்தது. கைக் குழந்தையை இரண்டு கைகளாலும் சேர்த்து அணைத்தவாறு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தாம் ஒரு குழந்தைக்குத் தாய் என்ற போதிலும், மக்கள் பிரதிநிதியாக தமக்குள்ள கடமைகளை நன்கு அறிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

சொத்து, குடிநீர் வரி செலுத்தாவிட்டால் தாஜ்மகால் மூடப்படும் என நோட்டீஸ்

ஆக்ரா: தாஜ் மகாலுக்கு சொத்து, குடிநீர் வரி செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ரா மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள அந்த நோட்டீசில் குடிநீர் வரியாக ரூ.1.9 கோடியும் சொத்து வரியாக ரூ.1.5 லட்சமும் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ் பல்வேறு தரப்பினரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மாணவனை அடித்து மாடியில் இருந்து தள்ளிவிட்ட ஆசிரியர்

பெங்களூரு: கர்நாடகாவில் நான்காம் வகுப்பு படித்து வந்த பத்து வயதுச் சிறுவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதுடன், பள்ளிக் கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள மாடத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அச்சிறுவன் உயிரிழந்துவிட்டான். மாணவனின் தாயாரும் அதே பள்ளியில்தான் ஆசிரியையாக உள்ளார். அவரையும் அந்த ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.