கவிதா: இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
ஹைதராபாத்: ஊழல், லஞ்ச வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதா மீது மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இது பழிவாங்கும் நடவடிக்கை என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ரூ.100 கோடி லஞ்சம் தந்த 'சவுத் குருப்'பை கவிதாவுக்கு பங்கு இருந்ததாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை கவிதா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு சில மாதங்களுக்கு முன்னர் புதிய மதுபான கொள்கையை அறிவித்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், மதுபான கொள்கையின் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, சிபிஐயும் மத்திய அமலாக்கத்துறையும் இந்த முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக தொழிலதிபர்கள் சிலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒரு தொழிலதிபர், 'சவுத் குருப்' என்ற பெயரில் சில முக்கியப் பிரமுகர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டதாகவும் அந்தக் குழுவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் உள்ளார் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
மேலும், அந்தக் குழுவில் கவிதாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்றும் டெல்லி அரசுக்கு இந்தக் குழுவின் சார்பில் நூறு கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டது என்றும் அத்தொழிலதிபர் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து கவிதாவிடம் அமலாக்கத்துறையும் சிபிஐயும் விசாரணை மேற்கொண்டன. அதன் முடிவில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அதில், 'சவுத் குருப்' என்ற குழுவுக்கு கவிதா தான் தலைமை தாங்கினார் என்றும் பல்வேறு வகையிலும் அந்தக் குழுவில் ஆதிக்கம் செலுத்தி, அதை கட்டுப்படுத்தி வந்துள்ளார் என்றும் அமலாக்கத்துறை சாடி உள்ளது.
ஆனால் கவிதா இதை மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
"காலம் என் நேர்மையை நிரூபிக்கும். இது பாஜவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பாஜகவின் முகத்திரையை முதல்வர் சந்திரசேகர ராவ் கிழித்தெறிவதால் பயம் கொண்டு அக்கட்சி இவ்வாறு மிரட்டுகிறது," என கவிதா தெரிவித்துள்ளார்.
பாஜகவை எதிர்த்து முதல்வர் சந்திரசேகர ராவின் ஆதரவாளர்கள் மிக விரைவில் போராட்டம் நடத்த தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

