கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய 352 பேர் பலி
புதுடெல்லி: கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 352 பேர் பலியாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறையின் இணையமைச்சர் ஜெயந்த் சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், கழிவுநீர் தொட்டி, சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் இந்த மரணச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 57 பேரும் தமிழகத்தில் 46 பேரும் இவ்வாறு மாண்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மிசோரம் கல்குவாரி விபத்தில் சிக்கி எட்டு தொழிலாளர்கள் பலி
அய்சாவல்: கல்குவாரி விபத்தில் சிக்கி எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மிசோரம் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. அங்குள்ள மவ்தார் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஒரு பகுதியில் ஏராளமான கற்கள் சரிந்து விழுந்தன. அதில் 12 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியை மேற்கொண்டபோது, எட்டுப் பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மற்ற நால்வரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.
பேருந்து கவிழ்ந்து விபத்து: கல்விச் சுற்றுலா சென்ற எட்டு மாணவிகள் பலி
இம்பால்: பள்ளி மாணவிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு மாணவிகள் பலியாகிவிட்டனர். இந்தச் சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள யயிரிபோக் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் பள்ளி மாணவிகள் 35 பேர் கல்விச் சுற்றுலாவின் பொருட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு சாலை வளைவில் திரும்பியபோது, அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஐந்து மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்று மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியுறவு கொள்கை: சவாலை எதிர்கொண்டுள்ள பிரதமர் மோடி
புதுடெல்லி: எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடி உள்ளன. இந்நிலையில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் பிரதமர் மோடி கடும் சவாலை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

