தொடர் கொலையாளி சார்ல்ஸ் சோப்ராஜை விடுவிக்க நேப்பாள நீதிமன்றம் உத்தரவு

தொடர் கொலையாளி சார்ல்ஸ் சோப்ராஜை விடுவிக்க நேப்பாள நீதிமன்றம் உத்தரவு

2 mins read
a756a33f-6bbb-41a7-ac3b-1a0da1ffc632
-

புது­டெல்லி: நேப்­பாள சிறை­யில் உள்ள தொடர் கொலை­யாளி சார்ல்ஸ் சோப்­ராஜை விடு­விக்க அந்­நாட்டு உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பளித்­துள்­ளது.

1970களில் ஆசியா முழு­வ­தும் நடந்த பல்வேறு தொடர் கொலை­களுக்கு கார­ண­மா­ன­வர் பிரெஞ்சு தொடர் கொலை­யாளி சோப்­ராஜ், 78.

இரண்டு வட அமெ­ரிக்க சுற்றுப்­ப­ய­ணி­க­ளைக் கொன்ற வழக்­கில் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து 2003ஆம் ஆண்டு முதல் நேப்­பா­ளத்­தில் உள்ள சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தார் சோப்ராஜ்.

உடல் நலக்­கு­றைவை கார­ணம் காட்டி தன்னை விடு­விக்க வேண்­டும் என்று அந்­நாட்டு உச்ச நீதி­மன்­றத்­தில் சோப்­ராஜ் மனுத்­தாக்­கல் செய்து இருந்­தார்.

இந்த மனுவை விசா­ரித்த நீதி­மன்­றம், சோப்­ராஜை விடு­விக்க உத்­த­ர­விட்­டுள்­ளது.

சோப்­ராஜை தொடர்ந்து சிறையில் அடைத்­தி­ருப்­பது மனித உரி­மை­க­ளுக்கு எதி­ரா­னது என்று நீதி­மன்­றம் அதன் தீர்ப்­பில் கூறி­யது.

அவரை சிறை­யில் அடைத்திருக்க அவர் மீது வேறு வழக்­கு­கள் எது­வும் நிலு­வை­யில் இல்லை என்­ப­தால் உட­ன­டி­யாக அவரை விடு­வித்து, 15 நாள்­க­ளுக்­குள் அவ­ரது சொந்த நாடான பிரான்­சுக்கு திருப்பி அனுப்ப வேண்­டும் என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

1976ல் டெல்லி தங்கு விடுதியில் பிரெஞ்சு சுற்­றுப்­ப­யணி விஷம் குடித்து இறந்த வழக்­கில், சோப்ராஜ் இந்­தி­யா­வில் கைது செய்­யப்­பட்­டார்.

இந்த வழக்­கில் அவ­ருக்கு 12 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 1986ல் சிறையில் இருந்து தப்­பிச்­சென்ற அவர் மீண்­டும் இந்தியாவின் கோவா­ மாநிலத்தில் பிடிபட்டார்.

1997ல் விடு­விக்­கப்­பட்ட சோப்­ராஜ் உட­ன­டி­யாக பாரிஸ் சென்றார். ஆனால் வேறொ­ரு­வ­ரைக் கொன்­ற­தற்­காக 2003ல் நேப்­பா­ளத்­தில் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

இந்த வழக்கில் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து, நேப்பாளம், இந்தியாவில் அவர் செய்த 24 கொலைகளுக்கு 21 ஆண்டுகள் சிறையில் கழித்தார். ஆசிய அளவில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் சோப்ராஜ் பெயர் இடம் பெற்றிருந்தது.