பெங்களூரு: சாலைக் குழிகளை மூட அரசுப் பொறியியலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் குழிகளை மூட ஏற்படும் செலவு பொறியியலாளர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்றும் பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் அறிவித்துள்ளார்.
அண்மைய மழைக்குப் பின்னர் பெங்களூரில் சாலை பள்ளங்கள் அதிகரித்துள்ளன. முக்கியமான சாலைகள்கூட குண்டும் குழியுமாக மாறிவிட்டதாகவும் தொடர் விபத்துகள் நிகழ்வதாகவும் பொதுமக்கள் புகார்கள் எழுப்பி உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு சாலைகளைச் சீரமைக்க ரூ.25,000 கோடி ஒதுக்கப்பட்டும்கூட பலன் இல்லை என ஊடகங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.
இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக நீதிமன்றமும் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத், பொறியியலாளர்களுக்கு அதிரடியாக எச்சரிக்கை விடுத்தார். ஆங்கிலப் புத்தாண்டு தினத்துக்குள் அனைத்து சாலை குழிகளையும் மூட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைக் குழிகளை மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

