செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8031c952-495e-4e33-a32c-a1a7d992b873
-

சாலை விபத்து: 16 வீரர்கள் பலி

புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இந்திய-சீன எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில் இருந்து மூன்று வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். அவற்றில் ஒரு வாகனம் ஒரு கூர்மையான திருப்பத்தைக் கடந்தபோது சாலையை விட்டு விலகி செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 16 ராணுவ வீரர்கள் மாண்டனர். நால்வர் காயமடைந்ததாக நேற்று ராணுவம் தெரிவித்தது. தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

ஜப்பான்-இந்தியா முதலாவது ஆகாயப் படைப் பயிற்சி

புதுடெல்லி: இந்திய ஆகாயப் படையும் ஜப்பானிய ஆகாயப் படையும் ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை முதன்முதலாக இரு தரப்பு விமானப் பயிற்சியை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

'வீர் கார்டியன்23' என்ற அந்தப் பயிற்சி ஜப்பானில் இரண்டு விமானத்தளங்களில் நடத்தப்படும். பயிற்சி பற்றி அறிவித்த ஜப்பானிய ஆகாயப் படை, இருநாட்டு ஆகாயப் படைகளுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதும் ஜப்பானிய ஆகாயப் படையின் ஆற்றலைப் பெருக்குவதும் பயிற்சியின் நோக்கம் என்றது.

சீனாவுக்கு மருந்து: இந்தியா தயார்

புதுடெல்லி: உலகில் மருந்து தயாரிப்பில் குறிப்பிடத்தக்க நாடாக இருந்து வரும் இந்தியா, கொரோனா பிடியில் சிக்கிவிட்ட சீனாவுக்கு காய்ச்சல் தடுப்பு மருந்து அனுப்பத் தயார் என்று அறிவித்துள்ளது.

சீனாவில் திடீரென்று கொரோனா தொற்று தாறுமாறாக அதிகரித்துவிட்டதாகவும் அந்த நாட்டில் மருந்து, மாத்திரைகளுக்கும் பரிசோதனைக் கருவிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிய வருகிறது.

இந்த நிலையில், இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு மன்றத்தின் தலைவரான ஷாஹில் முஞ்சால், சீனாவுக்கு மருந்து மாத்திரை அனுப்பத் தயார் என்று தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர், புதுடெல்லியில் சோதனை

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவை, (என்ஐஏ) பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்பில் காஷ்மீர், புதுடெல்லியில் 17 இடங்களில் அது சோதனைகளை நடத்தியது. மேல் விவரங்கள் தெரியவில்லை.

69 நாட்டு சிறைகளில் 8,441 பேர்

புதுடெல்லி: இந்தியர்கள் 8,441 பேர் 69 நாடுகளில் சிறையில் உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் 4,389 பேர், நேப்பாளச் சிறைகளில் 1,222 பேர் உள்ளனர். இந்தியப் பெண்கள் 115 பேர் 19 நாடுகளில் சிறையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.