பாட்னா: பீகாரில் செங்கல் சூளை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டம், மோதிஹாரி நகருக்கு அருகே உள்ள நரிர்கிர் பகுதியில் செங்கல் சூளை அமைக்கப்பட்டு, 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை சூளை அருகே இருந்த புகைபோக்கிக் கூண்டில் திடீரென பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டது.
இந்தச் சத்தத்தைக் கேட்டதும் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
சற்று நேரத்தில் புகைபோக்கிக் கூண்டு சரிந்து விழுந்ததில் தரைப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒன்பது பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த இடிபாடுகளுக்குள் மேலும் ஒரு சில ஊழியர்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் காவலர்களும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சூளையின் உரிமையாளரும் காயமடைந்துள்ளார். மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தோருக்கு அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

