கான்பூர்: கான்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் அருகில் 10 அடி நீள சுரங்கம் தோண்டி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த நகைப் பெட்டகத்தை உடைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை சூறையாடிச் சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
"தங்க நகை பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்த திருடர்கள் அதிலிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 1.8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
எனினும், தங்க நகை பெட்டகத்தின் அருகில் இருந்த பணப்பெட்டகத்தை அவர்களால் உடைக்கமுடியாததால் அதில் வைக்கப் பட்டிருந்த 32 லட்சம் ரூபாய் பணம் தப்பியது," என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் மத்திய அரசுக்குச் சொந்தமான ஸ்டேட் வங்கி உள்ளது.
இதனை ஒட்டியுள்ள காலி நிலத்தில் இருந்து ஏறக்குறைய 10 அடி நீளத்திற்கு அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் சுரங்கப்பாதை தோண்டி அதன் வழியாக வங்கிக்குள் நுழைந்து ₹1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
"பணப்பெட்டகத்தை திறக்க 'கேஸ் கட்டர்' கருவியைக் கொள் ளையர்கள் பயன்படுத்தி உள்ளனர். எச்சரிக்கை மணி எழுப்பும் கருவியை அவர்கள் முடக்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள் ளது," என காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வங்கியில் 29 வாடிக்கையாளர்களால் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வங்கியின் மேலாளர் நீரஜ் ராய் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தடயவியல் நிபுணர்கள் வங்கியில் பதிவாகியிருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வங்கியில் பணிபுரியும் யாரோ ஒருவரின் உதவியுடன் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் பாதுகாப்புப் பெட்டக அறை இருக்கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தவர்கள் கொள்ளையடித்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

