துபாய் லாட்டரியில் தெலுங்கானா ஆடவருக்கு ரூ.30 கோடி பரிசு
திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவரான ஓகுலா அஜய், குடும்ப வறுமை காரணமாக நான்கு ஆண்டுகளாக துபாயில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், துபாயில் விற்பனையாகும் இரண்டு ஜாக்பாட் லாட்டரிச் சீட்டுகளை வாங்கிய அஜய்க்கு, நேற்று முன்தினம் வெளியான குலுக்கலில் முதல் பரிசாக ரூ.30 கோடி விழுந்திருந்தது. "கனவிலும் நினைக்காத வெற்றி கனிந்துள்ளது," என்று அஜய் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்திய ஐந்து
காவலர்கள் உட்பட 17 பேர் சிக்கினர்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள குப்வாரா மாவட்டம் வழியாக ஜம்மு-காஷ்மீருக்குள் போதைப்பொருள் கடத்திய ஐந்து காவலர்கள் உட்பட 17 பேர் கொண்ட கும்பலைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து குப்வாரா மாவட்ட காவல் ஆய்வாளர் யூகல் குமார் மன்ஹாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஷகிர் அலி கான் என்பவர் தான் குப்வாரா முழுவதும் போதைப்பொருள் விநியோகம் நடப்பதற்கு மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளார். கைதான 17 பேரிடமும் மேலும் பல தகவல்கள் பெற விசாரணை நடந்து வருகிறது," என்றார்.
ராகுலின் யாத்திரை டெல்லி வந்தது
புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நேற்று 108வது நாளாக தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தது. இப்பயணத்தில் ராகுலின் தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியாவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கலந்துகொண்டு ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர்.
இதனிடையே, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறை களைப் பின்பற்றும்படியும் இயலாவிடில் பாதயாத்திரையை ஒத்தி வைக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது.
மாணவிகளின் அரவணைப்பு வைத்தியம்
பெங்களூரு: உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டை வரவேற்கும் விதமாக பெங்களூருவைச் சேர்ந்த அபூர்வ அகர்வால், 19, தனிஷா பரஸ்ராம்கா, 22, ஆகிய இரு கல்லூரி மாணவிகளும் 'ஃப்ரீ ஹக்ஸ்' என்ற பதாகையை ஏந்தியபடி, 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்பட பாணியில் ஆண், பெண் எனப் பாராமல் அனைவரையும் ஆரத் தழுவி, அரவணைத்து வைத்தியம் செய்தனர். "மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆரத் தழுவிக்கொண்டால் அறிவியல் ரீதியாக மன அழுத்தம் குறையும் எனச் சொல்லப்படுகிறது. மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதனை மேற்கொண்டோம்," என அவர்கள் கூறினர்.

