செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4c343fbd-58a6-40eb-a000-2935ca033402
-

வேணுகோபால் தூத் கைது

மும்பை: கடந்த 2012ல் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பதவியில் இருந்தபோது, இந்த வங்கி நிர்வாகம் வீடியோகான் குழுமத்திற்கு ஏறக்குறைய 3,250 கோடி ரூபாய் அளவில் கடன் அளித்துள்ளது. ஆனால், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த குற்றச்சாட்டின் தொடர்பில், வீடியோகான் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி வேணுகோபால் தூத்தை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மும்பையில் நேற்று கைது செய்தனர். ஐசிஐசிஐ வங்கி கடன் முறைகேடு வழக்கில் ஒரு சில தினங்களுக்கு முன்பு சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் கைதாகி உள்ளனர்.

சிகிச்சை பெறும் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 63, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நிதியமைச்சர் அலுவலகம் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,000 ரயில் நிலையங்கள் நவீனமயம்

புதுடெல்லி: மத்திய அரசின் 'அம்ருத் பாரத்' ரயில் நிலையத் திட்டத்தின்கீழ், நாட்டின் முக்கியமான 1,000 சிறிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதிக செலவின்றி இந்தப் பணியை நடைமுறைப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கசிந்த வினாத்தாள்; 55 பேர் கைது

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடக்க இருந்த நிலையில், இத்தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக வினாத்தாள் வெளியானது. அதையடுத்து ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில், 37 தேர்வு அதிகாரிகள் உட்பட 55 பேர் கைதாகி உள்ளனர். அவர்களில் ஏழு பெண்களும் அடங்குவர். கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை டிஜிபி உமேஷ் மிஸ்ரா கூறினார்.

ரூ.1 கோடி தங்கம் கடத்திய பெண் கைது

திருவனந்தபுரம்: துபாயிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ஷஹலா, 19, என்ற காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய உடல் பரிசோதனை யில் ஆடையுடன் தைக்கப்பட்ட மூன்று பாக்கெட்டுகளில் 1.880 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.