புதுடெல்லி: வடஇந்தியாவில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அத்துடன், உடலைச் சில்லிட வைக்கும் குளிர்காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுங்குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், வடமாநிலங்களில் அடுத்த நான்கு நாள்கள் வரை அடர் பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய நான்கு மாநிலங் களிலும் குளிர் அலை வீச வாய்ப்பு உள்ளது என்றும் கடும் பனிப்பொழி வின் காரணமாக முதியவர்களும் குழந்தைகளும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
டெல்லியின் ரிட்ஜ் பகுதியில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக குறைந்து உறைகுளிர் நிலவியதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
அடர் பனிமூட்டத்தால் ரயில், விமானப் போக்குவரத்துகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
சாலையில் செல்லும் வாகனங்கள் மெதுவாகவும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியும் சென்றன.
பனிப்பொழிவு காரணமாக விமா னச் சேவைகள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாகச் செல்வதையும் ரத்து செய்யப்படுவதையும் பயணிகளுக் குத் தெரிவிக்க ஏர் இந்தியா நிறு வனம் பயணிகள் சேவை மையத்தை துவங்கியுள்ளது.
அதேபோல், உ.பி., ராஜஸ்தான், அரியானா மாநிலங்களும் குளிரின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.
"மொத்த பஞ்சாப் மாநிலமும் குளிரில் உறைந்து போயுள்ளது. அடர்பனி மூட்டத்தால் வாகனம் ஓட்டுவதே பெரும் சவாலாக மாறியுள்ளது. கைகால்கள் விரைத்துப் போய்விடுகின்றன," என வாகன ஓட்டிகள் சிலர் தெரிவித்தனர்.
இமாச்சலப் பிரதேசத்திலும அடர் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டும் பனியால் பல நீர்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன.
டெல்லியில் பனிமூட்டம் காரணமாக 21 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இங்கு இரு நாள்களுக்கு மிகமிக அடர் பனிமூட்டம் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மூடுபனி, கடும் குளிரை கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் பாட்னாவில் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் டிசம்பர் 31 வரை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

