புதுடெல்லி: இந்தியா மீது போர் தொடுப்பதற்காக சீனாவும் பாகிஸ் தானும் ஒன்றாகத் தயாராகிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் டெல்லியில் 109 வது நாளாகத் தொடர்ந்தது. இந்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுடன் உரை யாடிய ராகுல்காந்தி, யூடியூப் ஒளிவழி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
"இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்துள்ளனர். போர் வெடிக்கும் சூழலில் நாடுகள் இரண்டும் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது," என்று அவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதியில் என்ன நடந்தது என்பதை நாட்டிற்கு மத்திய அரசு சொல்லவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ள ராகுல் காந்தி, நாம் என்ன நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதை உடனே விரைவாக எடுக்கவேண்டும். இதனை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்கவேண்டும். கால தாமதம் செய்தால் நாடுதான் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

