குஜராத்: குஜராத் மாநிலம், துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகிலிருந்த ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், ரூ.300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
படகில் இருந்த பத்து பாகிஸ்தானியர்களையும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.
இந்தியக் கடல் எல்லைப் பகுதிக்குள் அந்நிய நாட்டுப் படகுகள், கப்பல்கள் மூலமாக போதைப்பொருள் கடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இதனைத் தடுக் கும் வகையில், கடலோரப் பாதுகாப்புப் படையினரும் குஜராத் பயங் கரவாத தடுப்புப் படையினரும் ஒன்றிணைந்து குஜராத்தின் ஓகா கடற்கரையில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது.
அந்தப் படகை இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அல் சொஹாலி என்ற மீன்பிடிப் படகு நிற்காமல் சென்றதை அடுத்து, துப்பாக்கியால் சுட்டு படகை எச்சரித்து நிறுத்தினர்.
இது தொடர்பாக இந்தியக் கடலோரக் காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட படகில் இருந்து ஆயு தங்கள், போதைப்பொருள்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.1,930 கோடி மதிப்பிலான 346 கிலோ போதைப்பொருள்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த 44 பேரும் ஈரானைச் சேர்ந்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது.

