செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0ce0ea35-a78a-4689-806c-406a60efb70d
-

ரூ.70 லட்சம் வீடு நன்கொடை

திருப்பதி: திருவள்ளூர் மாவட்டம், கொடிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தாதியான என்.கே.நேமாவதி, தனக்குச் சொந்தமான இரண்டு தளங்களைக் கொண்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீட்டின் பத்திரம், சாவியை திருமலை-திருப்பதி ஆலய அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் வழங்கினார். அவர் தனது பெற்றோரின் நினைவாக அந்த வீட்டை ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்குவதாக தெரிவித்தார்.

தெலுங்கானா குதிரை பேரம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்ற விவகாரம் தொடர்பில், சிபிஐ விசாரணைக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநில ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து பாஜகவிற்கு கட்சி மாற ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.100 கோடி வீதம் 4 எம்எல்ஏக்களை மாற்ற பேரம் பேசிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு உடனடியாக மாற்றி தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

"இனி இவ்வழக்கை சிறப்பு விசாரணைக் குழு நடத்தத் தேவையில்லை. இதுவரை விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தையும் சிபிஐயிடம் சிறப்பு விசாரணைக் குழு ஒப்படைக்க வேண்டும்," என நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கு, பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலை யில், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கங்கையைச் சுத்தப்படுத்த ரூ.2,700 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: கங்கை ஆற்றுப்படுகையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், பங்ளாதேஷில் ரூ.2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கங்கை படுகையில் கழிவு நீரை அகற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி-பினராயி விஜயன் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

கேரளாவில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.