புதுடெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
டெல்லியில் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கு ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகளின் சேவை தடைபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் நான்கு நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடர் பனி மூட்டத்தால் ரெயில், விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆண்டு இறுதி விடுமுறை காலமான இப்போது ஏராளமானோர் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஏற்பட்டுள்ள அடர்ந்த மூடுபனியால் பல விமான நிலையங்களில் விமானச் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த மூன்று நாட்களில் சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது. மேலும், டெல்லியில் தரையிறங்க வேண்டிய இரண்டு விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் ஏற்பட்ட தாமதத்தால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்திலேயே நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவே அதிகமான பனிமூட்டம் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் நேற்று முன்தினம் கனரக வாகனம் மீது கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த கார், கன்னோஜ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

