ஜம்மு: ஜம்முவில் ராணுவத்தினர் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் மட்டும் தப்பிவிட்டார். அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து ஜம்முவின் காவல்துறை கண்காணிப்பாளர் முகேஷ் சிங் கூறுகையில், "வழக்கம் போல் ஜம்முவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். காலை சுமார் 7 மணி அளவில் அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கனரக வாகனம் வந்தது.
பொதுவாக அந்த நேரத்தில் அந்தப் பகுதி வழியாக கனரக வாகனம் ஏதும் வருவதில்லை.
"வாகனம் அருகே வரட்டும் என்று காத்திருந்தோம். அப்போது, திடீரென்று வாகனத்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் சிறுநீர் கழிக்கச் செல்வது போல் மறைவான பகுதிக்குச் சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் திரும்பவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் நாங்கள் அந்த வாகனத்தை நெருங்கினோம். அப்போது வாகனத்திலிருந்து எங்களை நோக்கி துப்பாக்கிக் குண்டுகள் வந்தன. உடனே நாங்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினோம். இதில் அந்த கனரக வாகனத்தில் இருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
"தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகிறோம். வாகனத்தில் இருந்த வெடிப் பொருட்கள் வெடித்ததால் வாகனம் தீ பிடித்தது. தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

