'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு மறைமுகமாக இயங்குவதாக தகவல்
புதுடெல்லி: மத்திய அரசால் அண்மையில் தடை செய்யப்பட்ட 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புக்கு பலர் ரகசியமாக நிதியுதவி செய்வதாகக் கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு நாட்டில் அமைதியைச் சீர்குலைத்து பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு நிதியளித்தல், நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கும் அந்த அமைப்பு ஆளாகியுள்ளது.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பு நாடு முழுவதும் 22 மாநிலங்களில் செயல்பட்டு வந்தது.
மத்திய அரசின் தடை உத்தரவுக்குப் பிறகும் அந்த அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பயங்கரவாத செயல்பாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிறகும்கூட ரகசியமாக இயங்கி வருகிறது என்றும் பல்வேறு தரப்பினர் இதற்கு நிதியுதவி அளிப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா, மலப்புரம் மாவட்டங்களில் அந்த முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். மொத்தம் 56 இடங்களில் சோதனை நடைபெற்றது.
அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், களப்பணியாளர்களின் இல்லங்களில் சோதனை நடைபெற்றதாகவும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த முத்திரையை அகற்றிவிட்டு, அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை நடவடிக்கை இன்றும் நீடிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் விசாரிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

