புதுடெல்லி: புலம்பெயர்ந்தோர் தற்போது வசிக்கும் இடங்களில் இருந்தபடியே தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.
பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊரைவிட்டு வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள் இந்தப் புதிய இயந்திரத்தின் மூலம் தேர்தலில் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்ய இயலும்.
'ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்' (ஆர்விஎம்) என்று குறிப்பிடப்படும் இந்த இயந்திரங்களின் செயல்பாட்டை நிரூபிக்க நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய, 57 மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த இயந்திரங்களின் செயல்பாட்டை நிரூபிக்கும் அந்த நிகழ்வுக்கு எதிர்வரும் ஜனவரி 16ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் எழக்கூடிய சட்ட, நிர்வாக, தொழில்நுட்ப சவால்கள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு ஏற்கெனவே விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு எழக்கூடிய சந்தேகங்கள் குறித்து அக்கட்சிகள் உடனுக்குடன் கேள்வி எழுப்பலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மேலும், இந்தப் புதிய இயந்திரங்கள் குறித்து எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எழுத்துபூர்வ கருத்துகளை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
தற்போது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற புதிய நடைமுறையைச் செயல்படுத்துவதிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாகவும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

