திருவனந்தபுரம்: தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களிடம் பணம் வசூலித்த கேரள அதிகாரிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்களிடம் ஆரியங்காவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் கேரள அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, கேரள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மாறு வேடத்தில் சென்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கைது செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் காவல்துறை அதிகாரிகள் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து ஆரியங்காவு சென்றனர்.
அப்போது சோதனைச் சாவடி அலுவலகம் முன்பு நின்றிருந்த முகவர் ஒருவர், அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள், வாகனங்களில் வந்த ஐயப்ப பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரைப் பிடிக்க முயன்றபோது ஓட்டம்பிடித்தார்.
இதையடுத்து, போக்குவரத்து துறையின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்து துறை அதிகாரிகளின் மேசை மீது கணக்கில் வராத ரொக்கப் பணம், தின்பண்டங்கள் ஆகியவை காணப்பட்டன.
நேற்றும் இந்த சோதனை நடவடிக்கை நீடித்தது. கணக்கில் வராத ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையின் நடவடிக்கையை பக்தர்கள் பாராட்டி உள்ளனர். இதற்கிடையே, சபரிமலையில் கடந்த 41 நாள்களில் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் வாங்கிய அப்பம், அரவணை, உண்டியல் காணிக்கை மூலம் ரூ.223 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

