செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f2cf2ba6-2b3b-4ff3-9414-6180805eb02e
-

போதையில் துன்புறுத்தும் மனைவி

ராய்ப்பூர்: போதைப் பழக்கத்துக்கு அடிமையான மனைவி தொடர்ந்து துன்புறுத்துவதாகவும் அவரை விவாகரத்து செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். "என் மனைவி போதைப் பாக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார். போதை தலைக்கேறியதும் என்னையும் என் குடும்பத்தினரையும் அடித்து துன்புறுத்துவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாக்குகிறார். அவரை விவாகரத்து செய்ய விரும்புகிறேன்," என்று கணவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் பறக்க ரூ.7,000

ஜெய்ப்பூர்: இனி ஏழாயிரம் ரூபாய் இருந்தால்கூட ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளலாம். ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் தனியார் நிறுவனமும் சேர்ந்து அங்குள்ள சாம் மணல் குன்று பகுதிகளுக்குச் செல்ல ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கியுள்ளன. பாலைவனப் பகுதிகளில் உள்ள மணல் குன்றுகள் மேல் ஹெலிகாப்டர்கள் பறந்து செல்லும். ஐந்து நிமிடங்கள் பறக்க ரூ. 7 ஆயிரம் கட்டணம். இதுதவிர 15 நிமிடங்கள் பறந்து செல்லும் சேவையும் உண்டு. தினமும் 200 சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியும் என்றும் சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் தர்மேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் பலி

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் பலியாகிவிட்டதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நொய்டாவில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று அந்த இருமல் மருந்தை அனுப்பியதாகவும் அதில் உள்ள குறிப்பிட்ட ஒரு நச்சுப்பொருளால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.