புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 40 நாள்களுக்கு மிகுந்த கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் நாடு முழுவதும் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு பிரதமர் மோடி உத்தர விட்டுள்ளார்.
இதையடுத்து, மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இம்முறை புதிய அலை உருவானாலும் உயிரிழப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் என சுகாதார நிபுரணர்கள் கணித்துள்ளனர்.
"மருத்துவ உயிர் வாயு உருளைகள், கொரோனா மருந்துகள் தேவையான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்," என மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுரை வழங்கி உள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய மேலதிக பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 268 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,552ஆக அதிகரித்தது.

