கோல்கத்தா: ரயில்வே துறையை நவீனமயமாக்குவதற்காக பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஹவுரா-நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமையன்று பிரதமா் நரேந்திர மோடி நேரில் பங்கேற்பதாக இருந்தார்.
ஆனால், தனது தாயாா் ஹீராபென் மறைவைத் தொடா்ந்து, குஜராத்துக்கு சென்றார் மோடி. அங்கு தாயின் உடல் தகனம் செய்யப்பட்டவுடன், அகமதாபாத்தில் இருந்தவாறே, காணொளி வாயிலாக 'வந்தே பாரத்' ரயில் சேவை, இதர திட்டங்களை தொடக்கி வைத்தாா்.
அப்போது பேசிய மோடி, "தற்போதைய 21ஆம் நூற்றாண்டில், நாட்டின் விரைவான வளா்ச்சிக்கு ரயில்வே துறையின் மேம்பாடு, சீா்திருத்தங்கள் மிக அவசியம். அதனடிப்படையில், நாடு முழுவதும் ரயில்வேயில் மாற்றங்களை புகுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"மக்களுக்குத் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, புதிய விமான நிலையங்கள், நீா்வழிப்பாதைகள், துறைமுகங்கள், சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன," என்றார் அவர்.
மேடை ஏற மறுத்த மம்தா
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எரிச்சலடைந்தார். ஆளுநர் ஆனந்த போஸ், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எவ்வளவோ சமாதானபடுத்தியும் வற்புறுத்தியும் மம்தா மேடை ஏற மறுத்துவிட்டார்.
பார்வையாளர்கள் வரிசையில் இருந்தபடியே பேசிய மம்தா, பிரதமருடைய தாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தாயின் இழப்பு நேர்ந்திருந்த நேரத்திலும் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்றதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்த அவர், மோடியை சற்று ஒய்வு எடுத்துக்கொள்ளுமாறும் கூறினார்.

