செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ea88909c-e6bb-4dd8-8862-049d9afe16ed
-

வழக்கறிஞர்கள் இல்லாததால்

63 லட்சம் வழக்குகள் நிலுவை

அமராவதி: வழக்கறிஞர்கள் கிடைக்காததால் இந்தியா முழுவதும் 63 லட்சம் வழக்குகளின் விசாரணை தாமதமடைந்துள்ளதாக தேசிய நீதித்துறை புள்ளிவிவர அமைப்பின் தரவுகள் கூறுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

அதுபோல, தேவையான ஆவணங்கள் அல்லது பதிவுகள் கிடைக்காத காரணத்தால் 14 லட்சம் வழக்குகளின் விசாரணை தாமதமாகி வருவதும் இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, நமது நீதிமன்றங்கள் முழுத் திறனுடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வழக்கறிஞா்கள் சங்கத்தின் ஆதரவு மிகவும் அவசியமானதாகும் என்றும் அவா் கூறினாா். ஆந்திர மாநிலம் அமராவதியில் ஆந்திர பிரதேச நீதித்துறை அகாடெமியை தொடக்கி வைத்து பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

சாலை விபத்தில் 9 பேர் மரணம்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் மாண்டுவிட்டனர். மேலும் 28 பேர் பலத்த காயமடைந்தனர்.

நவ்சாரி மாவட்டம் வெஸ்மா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வல்சாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார், பேருந்துமீது மோதியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா

ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகளுக்குத் தடை

புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குவதால் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பகுப்பாய்வு கூட்டத்தில், டெல்லியில் காற்றின் தரமானது வரும் நாட்களில் மேலும் மோசமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதைத் தவிர்க்கும் வகையில், டெல்லியில் கட்டுமான பணிகள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.