புதுடெல்லி: கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம் காலை 5.30 மணி அளவில், டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பன்ட் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலைத் தடுப்பில் மோதி கார் தீப்பற்றி எரிந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலில், சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் அங்கிருந்து டேராடூன் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவரது மூளை, முதுகுத்தண்டு பகுதிகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டது. அந்த உறுப்புகள் சீராக உள்ளதைப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறின.
அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் மூட்டில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அவர் விரைந்து குணம் பெற வேண்டி சக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ரிஷப் பண்ட்டின் தாயாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.
காப்பாற்றியவர்களுக்குப் பாராட்டு
இதற்கிடையே, பண்ட்டை விபத்தில் இருந்து காப்பாற்றிய ஹரியானா போக்குவரத்து கழகத்தின் பானிபட் டெப்போவுக்கு உட்பட்ட பேருந்து ஓட்டுனர் சுஷில் குமார், நடத்துனர் பரம்ஜீத் ஆகிய இருவரும் போக்குவரத்துத் துறை சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.
மனித தன்மையுடன் செயலாற்றியதற்காக, மாநில அரசும் அவர்களைக் கௌரவிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய நடத்துனரான பரம்ஜீத், "விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற ஓடி சென்றோம். நாங்கள் அவரை (பண்ட்) காரில் இருந்து வெளியே இழுத்தவுடன், 5 முதல் 7 வினாடிகளில் கார் தீப்பற்றி எரிந்தது. அவரது தனிப்பட்ட விவரங்களைக் கேட்டபோது, அவர் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்பது தெரிந்தது," என்று சொன்னார்.
கிரிக்கெட் பற்றி அதிகம் அறிந்திராத ஓட்டுனர் சுஷில் குமார் தனக்கு ரிஷப் பன்ட் யார் என்பதே தெரியாது எனக் கூறிஉள்ளார்.

