நிகோசியா: பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்குக் கட்டாயப்படுத்த முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்டை நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவைப் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
"இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவைப் பேணுவதற்கே விரும்புகிறது. ஆனால், சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது.
"இரண்டாவது, எல்லை பிரச்சினை. எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா உறவு சுமுகமாக இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
"தன்னிச்சையாக எல்லைக் கட்டுப்பாடு கோட்டை மாற்றி அமைப்பதற்கு இந்தியா உடன்படவில்லை என்பதால் அதில் பெரும் சிக்கல் உருவாகி இருக்கிறது.
"சமாதானத்தை விரும்பும் நாடாக இந்தியாவிற்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது," என்றார் அவர்.
இந்தியா சைபரஸூடன், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, இருநாடுகளுக்கிடையே மக்கள் புலம்பெயர்வதை எளிதாக்கும் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு என 3 ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இந்தியாவின் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவாக இருப்பதையே விரும்புவதாகவும் அதற்காக இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

