புதுடெல்லி: பாஜகவினரைத் தன்னுடைய குருவாக கருதுவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும் ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை நடைபயணம்' மேற்கொண்டு வருகிறார்.
செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணத்தில், தற்போது டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மாற்றுப்பார்வையுடன் மக்களை அணுக வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி செல்லும் பாதையை தீர்மானிக்க பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் உதவுவதாக குறிப்பிட்ட அவர், பாஜகவினரைத் தன்னுடைய குருவாக கருதுவதாக சொன்னார்.
இதற்கிடையே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறியப்படுவார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அதிகார அரசியல் செய்யவில்லை. மாறாக அவர் மக்களுக்கான அரசியலை செய்கிறார் என்ற அவர், மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அவர் சொன்னார்.

