இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
வியன்னா: ஐக்கிய நாடுகள் சபை 1945ல் உருவாக்கப்பட்டது. 75 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஐ.நா. சபையைப் புதுப்பிப்பது இப்போது மிக அவசியம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (படம்) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வில் சீா்திருத்தம் மேற்கொள்வது இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதி. இது நாளையே நிகழ்ந்துவிடாது. ஆனால், உறுதியாக அது ஒரு நாளைக்கு நிகழும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆறு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் சைப்ரஸ் நாட்டுக்குச் சென்ற அவர் தனது பயணத்தை டிசம்பர் 31ஆம் முடித்துக்கொண்டு ஆஸ்திரியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவா் அந்நாட்டின் பிரதமர் கார்ல் நேஹாமர், ஐரோப்பிய மற்றும் அனைத்துலக விவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேசினார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வெளியுறவு அமைச்சா் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும்.
அந்தச் சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் பயங்கரவாதத்தால் உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆஸ்திரியாவின் தலைநகா் வியன்னாவில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அமைச்சா் கலந்துரையாடினாா்.
பின்னர் அந்நாட்டுத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான்தான் பயங்கரவாதத்தின் மையம் என்று கூறியுள்ளார். இது கடினமான வார்த்தையாக தெரியவில்லையா என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விளக்கம் அளித்த ஜெய்சங்கர், "பயங்கரவாதத்தின் மையம் என்பது நாகரிகமான விமர்சனம்தான். இதைவிடக் கடினமான வார்த்தையைக்கூட பயன்படுத்தி இருக்க முடியும்.
எங்களுக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதை உற்றுக்கவனியுங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய நாடு பாகிஸ்தான். எங்கள் மும்பை மாநகருக்குள் நுழைந்து நட்சத்திர விடுதிகளில் தாக்குதல் நடத்திய, வெளிநாட்டுப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய நாடு பாகிஸ்தான்.
அந்த நாடு நாள்தோறும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளாக இது நடந்து கொண்டேயுள்ளது.
எனவே, அந்த நாட்டை பயங்கரவாதத்தின் மையம் என்று கூறுவது பொருந்தும்,'' என கூறியுள்ளார்.
ரஷ்யா - உக்ரேன் போர் குறித்துப் பேசிய அமைச்சர், போரின் தொடக்கத்திலிருந்தே இரு நாடுகளுக்கிடையே பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக வழிகளில் தீா்வு காண வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றார்.
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை குறித்து பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா எல்லைக் கோட்டை மாற்ற முயற்சி செய்துவிட்டு இந்தியா மீது குறைகூறுவதாகக் கூறினார்.

