திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை என்பது மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டாக இருந்து வரு கிறது.
ஆனால், இந்தச் சண்டையை நடத்துவதற்கு ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
எனினும், சேவல் சண்டைக்கு ரூ.1,000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், இப்போட்டிகள் விதிமுறைகளை மீறி எங்கும் நடக்கின்றனவா என காவலர்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சேவல் சண்டை அமைப்பைச் சேர்ந்தவர்கள் 'சங்கராந்தி' எனப்படும் பொங்கல் பண்டிகை அன்று இப்போட்டியை இணையம் வழி நடத்துவதற்குத் திட்டம் தீட்டி உள்ளனர்.
இதற்காக வட இந்திய சந்தை யைத் தேர்ந்தெடுத்துள்ள சேவல் சண்டை அமைப்பாளர்கள், குறுந்தகவல், செயலி, நேரடி ஒளிபரப்பு, பணத்தை பந்தயம் கட்டும் கூடங்களுக்கு மாறி உள்ளனர்.
தற்போது சேவல் சண்டைக்கான ஒத்திகை பயிற்சியை நடத்தி வருகின்றனர். சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்களைக் கொண்டு ரகசியக் குழுக்களை உருவாக்கி, தங்களது ரகசியக் குறியீட்டு எண்களை சேவலின் பெயர்களுக்கு எதிராக பதிவிட ஏற்பாடு நடந்து வருகிறது.
வெற்றிபெற்ற சேவல்கள் மீது இணையம் வழி அமைப்பாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் கட்டியவர்களுக்கு, சிறு தொகையைப் பிடித்துக்கொண்டு அவர்களது வங்கிக் கணக்கில் பந்தயப் பணம் திருப்பிச்செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.