மைசூரு: மைசூரு சாமுண்டி மலையில் குஜராத் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்தது. 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் மைசூர். வெளி நாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதுண்டு. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து 50 பேர், ஒரு பேருந்தில் மைசூருக்கு வந்தனர். அவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சாமுண்டி மலைக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தீடிரென பேருந்தில் கறும்புகை வெளியானது. அதைக் கண்ட ஓட்டுநர் முன்னெச்சரிக்கையாக பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, பயணிகளை அவசர அவசரமாக தரையிறங்கச் செய்தார்.
பயணிகள் அனைவரும் தரையிறங்கியதும் பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஓட்டுநரின் சுதாரிப்பால் ஐம்பது பேரின் உயிர் காக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த தீயணைப்புப் படையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால், பேருந்தின் ஒரு பகுதி முழுமையாக எரிந்துபோய்விட்டது.
பேருந்தில் டீசல் கசிவு காரணமாக தீப்பிடித்தது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

