மும்பை: நடுவானில் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடிய பயணியைக் காப்பாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வரும் விஸ்வராஜ் வெமலா (படம்) என்ற மருத்துவர் ஏர் இந்தியா விமானம் மூலம் பெங்களூருக்குப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் அதே விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த 43 வயது பயணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விமானப் பணியாளர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, அந்தப் பயணிக்கு சிகிச்சை அளித்தார் மருத்துவர் விஸ்வராஜ்.
அந்தப் பயணி மூச்சுவிடாமல் மயங்கிய நிலையில் இருக்க, விஸ்வராஜ் அளித்த முதலுதவி சிகிச்சையின் பலனாக ஒரு மணி நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினார். எனினும் அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமான ஊழியர்களிடமும் மற்ற பயணிகளிடமும் இருந்த மருத்துவக் கருவிகளைப் பெற்று சிகிச்சை அளித்துள்ளார் விஸ்வராஜ். இம்முறை அந்தப் பயணி மீண்டும் கண்விழிக்க கூடுதல் நேரமானது.
இவ்வாறு சுமார் ஐந்து மணி நேரம் அந்தப் பயணியை உயிருடன் வைத்திருக்க விஸ்வராஜ் போராடினார்.
பின்னர் அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிறகு அந்தப் பயணி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக, அவசரம் கருதி பாகிஸ்தானில் விமானத்தை தரையிறக்க விமானி அனுமதி கோரினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பு, மருத்துவர் விஸ்வராஜுக்கு அந்தப் பயணி கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.
"கண்களில் கண்ணீருடன் அந்தப் பயணி எனக்கு நன்றி கூறினார். இந்தச் சம்பவம் என்றும் என் நினைவில் பதிந்திருக்கும்," என்றார் மருத்துவர் விஸ்வராஜ்.