ஜோஷிமத்: உத்தராகண்ட் மா நிலத்தில் நிலவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஷிமத் நகரத்தில் அதிகம் வெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், ஹோட்டல்களை இடிக்கும் பணி நேற்று தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் நிலவெடிப்புகளால் மக்கள் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிலவெடிப்பும் நிலச்சரிவும் அதிகரிக்கும் நிலையில் அந்நகரம் ஆபத்தான பகுதி, ஆபத்து உருவாகும் பகுதி, முற்றிலும் பாதுகாப்பான பகுதி என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மண்ணில் புதைந்துவரும் ஜோஷிமத் நகரில், 600 கட்டடங்களில் விரிசல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவன வல்லுநர்களின் மேற்பார்வையில் நடக்கும் இப்பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் கைகொடுப்பர்.
மொத்தம் 678 கட்டடங்களில் விரிசல் கண்டறியப்பட்ட நிலையில், 81 குடும்பங்களைச் சேர்ந்தோர் நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நாலாயிரத்துக்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர், போர்வைகள் போன்ற நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜோஷிமத் நகரம் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
அதிகமான கட்டுமானப் பணிகள், நகரமயமாக்கல் திட்டங்கள், நாள்தோறும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றால் அது புதையுண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அந்த வட்டாரத்தில் புதிய கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, அருகிலுள்ள கர்ணபிரயாக் நகரிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சில வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

