சுரங்கம் அமைத்து ஊடுருவல்; ஆளில்லா வானூர்தி மூலம் சோதனை
புதுடெல்லி: பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் சுரங்கங்கள் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்தகைய ஐந்து சுரங்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில், பூமிக்கடியில் உள்ளவற்றை ஆய்வு செய்யும் 'ரேடார்' கருவிகளை ஆளில்லா வானூர்தியில் பொருத்தி கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
காப்பீட்டுத் தொகைக்காக இளையரைக் கொன்ற நால்வர் கைது
திருப்பதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் பாச்சுப்பள்ளி என்ற இடத்தில் போலி நிறுவனத்தை நடத்தினார் ஸ்ரீகாந்த். தன்னிடம் வேலைகேட்ட பிட்சாபதி எனும் ஆதரவற்ற இளையர் பெயரில் ரூ.50 லட்சம் காப்பீடு செய்த அவர், மூவரின் உதவியுடன் பிட்சாபதியைக் கொலை செய்தார். பின்னர் காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பம் செய்தார். காப்பீட்டு நிறுவனம் சந்தேகப்பட்டு காவல்துறையிடம் புகாரளிக்கவே கண்காணிப்பு கேமராப் பதிவுகள் மூலம் கொலை செய்த நால்வரும், ஓராண்டுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி வழங்கிய மதிய உணவில் பாம்பு
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் வட்டாரத் தொடக்கப்பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு காணப்பட்டதாகவும் (படம்: என்டிடிவி) அதையடுத்து 30க்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு மாணவரைத் தவிர மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த மாணவரும் அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார்.
தூண் விழுந்து தாய், சேய் பலி
பெங்களூர்: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்றுக் காலை 11 மணி அளவில் மெட்ரோ ரயில் பாதைக்காகக் கட்டப்பட்ட தூண் ஒன்று இடிந்து சாலையில் விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மூவர் கீழே விழுந்தனர். சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த கணவன், மனைவி, அவர்களது இரண்டு வயது மகன் மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தாயும் அவரது இரண்டு வயதுக் குழந்தையும் உயிரிழந்தனர்.

