இந்தூர்: வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் நாட்டின் உண்மையான தூதர்கள் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்த தொகை சுமார் நூறு பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று இந்தூரில் நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொகையானது முந்தைய ஆண்டைவிட சுமார் 12 விழுக்காடு அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களையும் இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிதியமைச்சர், இதன் மூலம் அவை உலகளவில் பிரபலமடையும் என்றும் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.
"கொரோனா நெருக்கடிக்குப் பிறகான ஓராண்டு காலத்தில் தாயகம் திரும்பிய இந்தியத் தொழிலாளர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் எனக் கருதப்பட்ட நிலையில், ஏராளமான இந்தியர்கள் பயனுள்ள பணிகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றதுடன் அல்லாமல், ஓராண்டுக்குள் இந்தியாவுக்கு அவர்கள் அனுப்பும் தொகையும் 12% அளவு அதிகரித்துள்ளது.
"தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
"இதன் மூலம் அறிவாற்றல், முன்னேற்றத்தின் உலகளாவிய மையமாக இந்தியா மாறி வருகிறது," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர், சீனா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அப்பாற்பட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் தங்களுடைய தொழிற்சாலைகளை நிறுவலாம் என்ற கருத்தை இந்திய அரசு வலுவாக முன்னிறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த 25 ஆண்டுகளில் கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு ஆகிய நான்கு அம்சங்களில் இந்தியா கவனம் செலுத்த உள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே, வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிபர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இந்தூர் மாநாட்டில் பேசிய அவர், வெளிநாடு வாழ் இந்தியா்கள் பல்வேறு துறைகளில் கடினமாக உழைத்து முன்னேறி உள்ளதாகப் பாராட்டினார்.
அனைத்துலக அரங்கில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் முக்கியத்துவம் உள்ள தனித்துவ இடத்தைப் பெற்றுள்ளனா் என்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் துடிப்புமிக்க, நம்பிக்கை கொண்ட இந்திய சமூகம் உருவாகி வருகிறது என்றும் அதிபர் திரௌபதி முர்மு கூறினார்.
"கலை, இலக்கியம், அரசியல், தொழில்துறை, கல்வி கற்பித்தல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் நிபுணத்துவம் பெற்றவா்களாகத் திகழ்கின்றனா்.
"பல்வேறு சவால்களைத் திறம்பட எதிா்கொண்டு அவா்கள் வெற்றி பெற்றுள்ளனர்," என்றார் அதிபர் திரௌபதி முர்மு.