ஐசாவல்: மிசோரம் மாநிலத்தில் பங்ளாதேஷ், மியன்மார் நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகக் குவிந்து வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மிசோரம் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்று என்பதால் அம்மாநில நிர்வாகத்தால் குவிந்து வரும் அகதிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூரில் 'குகி சின்' என்று குறிப்பிடப்படும் பழங்குடி இன மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.
அண்டை நாடான பங்ளாதேஷில் சுமார் நாற்பது லட்சம் 'குகி சின்' பழங்குடியின மக்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல் மியன்மாரில் இந்த எண்ணிக்கை நான்கு லட்சமாக உள்ளது.
இரு நாடுகளிலும் இப்பழங்குடியின மக்கள் பல்வேறு அடக்குமுறை, பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஊடகங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதையடுத்து 'குகி சின்' பழங்குடியின மக்கள் பலர் எல்லை கடந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 40 ஆயிரம் பேர் மிசோரம் மாநிலத்துக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்றும் அவர்களுக்காக 156 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் அகதிகள் பராமரிப்பால் ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச்சுமையைச் சமாளிக்க இயலவில்லை என மிசோரம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பங்ளாதேஷில் இருந்தும் நூற்றுக்கணக்கான 'குகி சின்' பழங்குடியின மக்கள் அடைக்கலம் கோரி மிசோரம் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளனர். அம்மாநில எல்லையில் தற்காலிகமாக முகாமிட்டுள்ள அவர்கள் போதுமான உணவு, குடிநீர் இன்றி அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
அகதிகள் பலர் இந்திய எல்லையைக் கடக்க அங்குள்ள இந்திய பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுப்பதாகவும் இதனால் சிலர் உயிரிழக்க நேரிடுவதாகவும் மிசோரம் மாநிலத்தில் உள்ள 'குகி சின்' பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

