புதுடெல்லி: ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் வழங்கும் தானியங்கி இயந்திரத்துக்குள் பணத்தை நிரப்ப வாகனத்தில் வந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் காவலாளி ஒருவர் பலியான நிலையில், எட்டு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வசிராபாத் நகரில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இம்மையத்தில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் வழக்கமாக மாலை ஐந்து மணியளவில் பணம் நிரப்பப்படும்.
இதற்காக நேற்று முன்தினம் வங்கி சார்பில் ஊழியர்களும் காவலாளி ஒருவரும் அம்மையத்துக்கு வந்தனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த ஆடவர் ஒருவர் ஏடிஎம் மையத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அங்கிருந்த காவலாளி ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே உயிரிழந்தார்.
வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில், துப்பாக்கியால் சுட்ட அந்த ஆடவர், ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு வரப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார்.
பாதுகாப்பு அதிகமுள்ள டெல்லியில் நிகழ்ந்துள்ள கொள்ளைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

