செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2ea8dad1-cdfa-436e-a913-da2cfa020ae7
-

தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய உத்தரப்பிரதேச அரசு

சென்னை: உத்தரப் பிரதேச அரசு சென்னையில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அம்மாநில அரசு தெரிவித்தது. இந்திய வர்த்தகம், தொழில் துறை கூட்டமைப்பின் உதவியோடு இம்மாநாடு சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்றனர். எனினும் இம்மாநாடு குறித்து தமிழக ஊடகங்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

55 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

லக்னோ: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆறு வயதுச் சிறுவன் சுமார் ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டான். நேற்று முன்தினம் ஹாப்புர் பகுதியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் அந்தச் சிறுவன் தவறி விழுந்தான். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் 55 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

தனது மருத்துவ செலவுகளை தாமே ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி

புதுடெல்லி: தனக்குரிய மருத்துவ செலவுகளுக்காக அரசுப் பணத்தை பிரதமர் மோடி செலவழிப்பதில்லை என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. இது தொடர்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரஃபுல் சர்தா என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு அளித்துள்ள பதிலில், கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் தமக்கான மருத்துவ செலவுகள் முழு வதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. "பிரதமர் மோடியின் தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சை, மருந்துகளுக்கு அரசுப் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்கப்படவில்லை," எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் தொடர்பு; ஆடவருக்கு சிறை

திருவனந்தபுரம்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கேரள ஆடவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த முகமது போலகனி என்பவர் இக்குற்றச்சாட்டின் பேரில் கைதானார். விசாரணையில் அவர் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அவர் மீதான வழக்கு கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.